மனு எண்:

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார்
5/179 மசக்காளிப்பாளையம் ரோடு
கோயம்புத்தூர் 642 105

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்.

கடந்த ஏப்ரல் 29, 2012 மதியம் இரண்டு மணியளவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு மதுரைக் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து எண் டி.என்.58 என் 1672 என்ற பை-பாஸ் ரைடர் பேருந்தில் நானும் என் குடும்பத்தினரும் பயணம் செய்தோம். எனது இரண்டு மகன்களுக்கு தலா 10 வயது மற்றும் 6 வயது. எனவே நான் 2+2 (இரண்டு முழு டிக்கெட்டுகள் மற்றும் 2 அரை டிக்கெட்டுகள்) கேட்டேன். “அரை டிக்கெட்டுகள் கொடுக்கிறேன். ஆனால் சீட் கிடையாது” என்றார் நடத்துனர். “யாராவது வந்தால் அரை டிக்கெட்டுகளை சீட்டிலிருந்து எழுப்பி விட வேண்டும்” என்றும் சொன்னார். வேறு வழியின்றி நான் 3 முழு டிக்கெட் மற்றும் ஒரு அரை டிக்கெட் எடுத்தேன்.

பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்படி எனது மகன்கள் 13 வயதைத் தாண்டியிருக்கவில்லை. 130 செண்டி மீட்டர் உயரமும் இல்லை. எனவே அவர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு அரை டிக்கெட் தான் எடுக்க வேண்டும். ஆனால் புதிதாக அவர்களுக்கு ‘சீட் கிடையாது’ என்று நடத்துநர் சொல்லிய விதியின் காரணமாக வேறு வழியின்றி நான் முழு டிக்கெட் எடுக்க வேண்டியதாகிற்று.

பேருந்து நிலைய விதிகளின் படி அரை டிக்கெட்டுகள் எடுக்கும் குழந்தைகளுக்கு உட்காருமிடம் கிடையாதா என்பதை தெளிவு படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.

அதே போல, பேருந்து வரும் வழியில் தாராபுரம் அருகில் ஒரு சாலையோரக் கடையில் சாப்பாட்டிற்காக நிறுத்தப்பட்டது. அந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்துமே சுகாதாரக் குறைவு. மற்றும் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட மிக அதிகமான விலைக்கு விற்கிறார்கள். கேட்டால் கேவலமாக திட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட தனியார் கடைகளில் பேருந்துகளை நிறுத்தச் செய்வதற்கு எதுவும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கிறதா? பயணிகளின் சுகாதாரத்தைக் கெடுக்கும் இத்தகைஅய் கடைகளில் அரசுப் பேருந்துகளை நிறுத்தச் செய்வது சரி தானா?

விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

2 Responses to “பேருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக‌”

 1. mdtnstcmdu says:

  தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேருந்து
  நடத்துனரை விசாரணைக்கு ஆஜராக தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ள சாலையோர கடையில் நின்று செல்ல எவ்வித உத்தரவும் எங்களது அலுவலகம் மூலம் வழங்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.

 2. tnstccomml says:

  தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேருந்து நடத்துனருக்கு உரிய அறிவுரை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ள சாலையோர கடையில் நின்று செல்ல எவ்வித உத்தரவும் எங்களது அலுவலகம் மூலம் வழங்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.