மனு எண்:

ஆம்னி பேருந்துகள்

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார்
5/179 மசக்காளிப்பாளையம் ரோடு
உப்பிலிப்பாளையம்
கோவை 642 015

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்.

நான் பணி நிமித்தமாக மதுரைக்கு அடிக்கடி பேருந்தில் பயணிக்க நேரிடுகிறது. வார இறுதி நாட்களில் மதுரை ஆரப்பாளயம் பேருந்து நிலையத்தில் கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக நள்ளிரவு 1 மணிக்குக் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கிறார்கள். பேருந்து நிலையம் மட்டுமின்றி பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியிலும் கூட மக்கள் ஏராளமாக குவிந்து நிற்கிறார்கள். நேற்று (27-2-2012) நள்ளிரவு 12.45 மணியளவில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

இதே போல தான் எல்லா வாரங்களிலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் செல்பவர்கள் காத்திருப்பார்கள் என்று அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் கூறினார்.

மக்களை முறைப்படுத்தி ஓரமாக நிற்கச் செய்யவோ, அவர்களை வரிசைப்படுத்தி பேருந்தில் ஏறச் செய்யவோ காவலர்கள் இல்லை. இதனால் பேருந்து நிலையத்தினுள் பேருந்து நுழைவதற்கு முன்பே போட்டி போட்டுக் கொண்டு பலர் ஏறி இடம் பிடித்துவிடுவதால் வயதானவர்களும், குழந்தைகளோடு இருப்பவர்களும் பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது.

அதே போல பேருந்து நிலைய நுழைவாயில் அருகிலேயே தனியார் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிக் கொள்கின்றன. நேற்றிரவு ’ஸ்பேர் பஸ்’ என்று போட்டு சுமார் 3 பேருந்துகள் குறைந்தது 60 பேர்களை பேருந்தில் ஏற்றினார்கள். கோவைக்கு 200 ரூபாய் டிக்கெட் தொகை. ஆனால் அதற்கு டிக்கெட் கொடுப்பதில்லை. எனவே இது அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் பேருந்து. இதே போல பல தனியார் பேருந்துகளும், வேன்களும் ஆரப்பாளையம் பேருந்து நிலைய வாயிலில் நின்று வார இறுதி நாட்களில் மக்களை ஏற்றிச் செல்கிறார்கள்.

(1) வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும்.

(2) பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வரிசைகளாவது ஒதுக்கி பேருந்து நிலையத்தினுள் இருப்பவர்களை ஏற்றிக் கொள்ள வழி வகை செய்யுங்கள்.

(3) முறையற்ற வசூலில் ஈடுபடும் தனியார் பேருந்துகள், வேன் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுங்கள். குறிப்பாக ‘ஸ்பேர் பஸ்’ என்று பலகை மாட்டி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்.

(4) ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் காவலர்களை அதிகப்படுத்தி, பேருந்து நிலையத்தினுள் தான் மக்கள் பேருந்தில் ஏற வேண்டும் என்று ஒழுங்குப் படுத்த நடவடிக்கை எடுங்கள்.

மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

நன்றி.

One Response to “ஆம்னி பேருந்துகள்”

  1. tnstccomml says:

    1) வார இறுதி நாட்களில் தேவையான அளவு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    2) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறையின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படும் என்பதையும் எங்களது சகோதர போக்குவரத்து கழகங்களிடம் பேசி முடித்து அனைத்து பேருந்துகளிலும் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    3) மேலும் வார இறுதி நாட்களில் ஆரப்பாளையத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கு தனியார் பேருந்துகள் மற்றும் வேன்கள் இயக்காத வண்ணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் மூலமாக கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.